ஈரானிய குர்திஸ்தானின் அரசியல் படைகளின் கூட்டணி(CPFIK) என்கிற ஒரு இராணுவ கூட்டமைப்பு உருவாகி இருக்கிறது. இது பல்வேறு குர்திஸ்தான் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாக உருவாக்கப்பட்டுள்ளது. குர்திஸ்தான் ஜனநாயக கட்சி-ஈரான்(KDPI),குர்திஸ்தான் சுதந்திரக் கட்சி(PAK) குர்திஸ்தான் சுதந்திர வாழ்வுக்கான கட்சி(PJAK), ஈரானிய குர்திஸ்தானின் போராட்ட அமைப்பு உள்ளிட்ட ஆறு அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஈரானில் கிளர்ச்சியை தொடங்குவதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் நிதி மற்றும் ஆயுத உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
துருக்கி, சிரியா, ஈரான், ஈராக் என நான்கு நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு தேசம் குர்திஸ்தான். குர்து மக்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள்(சன்னி).
ஏன் குர்துகளுக்கு போராட வேண்டும் என்கிற ஒரு நிர்பந்தம் இங்கு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்தால், கிட்டத்தட்ட பல்வேறு ஆண்டுகளாக பல ஆண்டுகளாக ஈரான் ஒரு நவீன அரசு உருவான பிறகு அவர்களால் தங்களது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. பல்வேறு கட்ட போராட்டங்களிலும் அவர்கள் கொல்லப்படுகிறார்கள், அடக்கப்படுகிறார்கள். பல்வேறு உரிமைகளை இழந்து தான் வாழ்கிறார்கள். குர்து மொழியை பயன்படுத்தக் கூட ஈரான் அரசாங்கம் பல்வேறு மறைமுக தடைகளை விதித்துள்ளது. ஆனால் குர்துகள் தொடர்ந்து தங்கள் உரிமைகளுக்காக போராடுகின்றனர்.
தற்போது சிரியாவில் குர்துகளுக்கு அரசியல் உரிமைகளை வழங்காமல் கைவிட்ட அமெரிக்கா, அதே போன்று தான் ஈரானிலும் நடந்து கொள்ளும். ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் நலனுக்காக மட்டுமே தேசிய விடுதலை அமைப்புகளை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டியதை சாதித்துவிட்டு மீண்டும் அந்த தேசிய இன அமைப்புகள் அல்லது போராட்ட அமைப்புகளை கைவிட்டுவிடுவார்கள்.
தற்போது அமெரிக்கா செய்யப் விரும்புவதும் இதைத்தான். ஏனென்றால் ஈரானில் சில குர்து அரசியல் கட்சிகள் ஏற்கனவே ஆயுத அமைப்புகளை, குடிப்படைகளை வைத்துள்ளனர். அவர்களை பயன்படுத்தி குர்து மக்களை ஆயுதபானிகளாக்கி ஈரானுக்கு எதிராக போரிட வைத்து தற்போதுள்ள ஈரானிய அரசாங்கத்தை ஒரு ஆயுத ரீதியான உள்மோதலுக்கு இட்டுச் செல்வது என்பதுதான் அமெரிக்காவின் திட்டமாக உள்ளது. இது நடைபெறும் பட்சத்தில் அமெரிக்காவின் எண்ணமானது ஈரானை ராணுவ ரீதியாக பலவீனப்படுத்தி அங்கு ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தங்கள் நலனுக்கு சார்பான ஈரானிய ஆட்சியாளர்களை கொண்டு வருவது என்பது தான். இந்த திட்டத்திற்கு குர்து மக்கள் ஒருபோதும் துணை நிற்கக்கூடாது.
தற்போது ஈரான் அரசாங்கம் ஒரு நெருக்கடியான சூழலில் உள்ளது. ஈரானிய அரசாங்கத்தின் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், ஈரானிய அரசாங்கம் என்பது ஒரு இஸ்லாமிய குடியரசு. இஸ்லாமிய தத்துவ கண்ணோட்டத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு அரசாங்கம். தனது இனத்துவ, தேசிய அடையாளங்களை காட்டிலும் தனது இஸ்லாமிய நெறிமுறைகளையே உயர்த்திப் பிடிக்கிறது. இஸ்லாமிய கோட்பாட்டின் கீழ் அது அரசை அமைத்துள்ளது.
ஈரானிய அரசாங்கமும் இத்தகைய சவால்களை முறியடிப்பதற்கு குர்துகளுக்கு தன்னாட்சி உரிமைகளை வழங்கலாம் என்று தான் பல்வேறு அரசியல் கோட்பாட்டாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
ஏனெனில் உலகளாவிய அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் முன்னணியில் இருக்கும் ஈரான் தனது சிறு தவறாலும், சில நிர்வாக குழப்பங்களாலும் தனக்கு எதிரான ஆயுதப் படைகளை உருவாக்குவதற்காக தானே வழி வகுத்தது போல் ஆகிவிட்டது.
எனவே உடனடியாக ஈரான் அரசாங்கம் குர்து அரசியல் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள குர்துகளின் பாரம்பரிய தாயகத்திற்கு தன்னாட்சி உரிமையை வழங்குவதற்கும், குர்து மொழிக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
– ஜா.ஜோஸ் ஃப்ரீட்
(செய்தி ஆசிரியர், வாகைநியூஸ்.காம்)
அமெரிக்காவின் சதிக்கு துணை போகின்றனவா குர்து அமைப்புகள்?

பின்னூட்டமொன்றை இடுக