புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அஹமது 2022 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி காலமானார். அவர் மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரது சிந்தனைகள் குறித்து தமிழ்ச் சூழலில் எந்தவொரு விவாதமும் எழவில்லை.
கோட்பாட்டு ரீதியில் மார்க்சியத்தை விளக்கியதோடு, சமகாலப் பிரச்சனைகளையும் மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆராய்ந்து அவர் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிவந்தார். குறிப்பாக எட்வர்ட் செய்தின் புகழ்பெற்ற ‘ஓரியண்டலிசம்’ நூல் குறித்து அவர் எழுதிய விமர்சனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் பொருத்தப்பட்டை விளக்கி அவர் எழுதிய கட்டுரை முதலானவை கவனத்துக்குரியவை .
“ பாபர் மசூதி இடிப்புதான் இந்தியாவைப் பற்றி எழுதுவதில் எனக்கு இருந்த மனத்தடையைக் கைவிடும்படி என்னை கட்டாயப்படுத்தியது” என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்ட அவர் “கிராம்ஸ்சியின் சிந்தனைகள் இந்தியாவின் மதவாதச் சூழலை விளக்குவதற்குப் பொருத்தமானவை” என்றார். கடந்த 20 ஆண்டுகளில் மதவாதம் குறித்து அவர் விரிவான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
“பாபர் மசூதி இடிக்கப்பட்ட படங்களைப் பார்த்தால், மசூதியின் மாடங்களில் ஏறி அவற்றைத் தகர்த்தவர்கள் யார் ?, அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்?’ அவர்கள் உயர் வகுப்புகளையோ அல்லது உயர் சாதிகளையோ சார்ந்தவர்கள் அல்ல; அவர்கள் முதலாளித்துவம் மற்றும் சாதிய சமூகத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த வகையான வன்முறை அவர்களுக்கு அதிகார உணர்வைத் தருகிறது—அவர்களின் சொந்த சக்தியின்மையை ஒரு மாயையாக வெல்லும் உணர்வு அது” என்ற அவர், உலகெங்கும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் உதிரிப் பாட்டாளி வர்க்கம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.
நரேந்திர மோடியின் வருகைக்குப் பின்னர் இந்திய அரசியல், அமெரிக்க அரசியலைப்போல ஆகிவிட்டது என்ற அவரது அவதானிப்பு கூர்ந்து நோக்கத்தக்கது. “ இந்திய அரசியல் வியக்கத்தக்க அளவில் அமெரிக்கமயமாக்கப்பட்டுள்ளது. மகத்தான தலைவரை மீட்பராகக் கருதி வழிபடுதல் ஒருபுறம், மறுபுறம் பயம் மற்றும் வெறியை திட்டமிட்ட முறையில் உற்பத்தி செய்வது வழக்கமாகிவிட்டது. அரசியல் இப்போது 24×7 தொலைக்காட்சி சேனல்கள், கருத்துக் கணிப்புகள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் நிதியுதவியுடன் நடத்தப்படும் மகத்தான பிரச்சார களியாட்டங்களால் இயக்கப்படுகிறது, அவற்றில் பெரும்பாலானவை இரகசியமானவை, கண்டுபிடிக்க முடியாதவை” என்று அவர் உலகெங்கும் தலைதூக்கியுள்ள வலதுசாரி அரசியல் போக்கை சுட்டிக்காட்டினார்.
‘இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளில் ஓரியண்டலிச அணுகுமுறை இருந்தது’ என்ற எட்வர்ட் செய்தின் குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக அய்ஜாஸ் அஹமது மறுத்தார். அதே நேரத்தில் இந்தியாவைப் பற்றிய மார்க்சின் முடிவுகளில் இருந்த தவறுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவைப் பற்றிய கார்ல் மார்க்ஸின் எழுத்துக்களில் இரண்டு பிழைகள் இருந்தன என்று குறிப்பிட்ட அவர் ‘ இந்திய கிராமங்கள் தன்னிறைவு பெற்றவையாக இருந்தன, கிராம சமூகங்கள் எவ்வித மாற்றமும் இல்லாது தேக்கம் அடைந்திருந்த விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தன, நிலத்தின் மீது அங்கு எவருக்கும் தனியுடைமை இல்லை’ – முதலான கார்ல் மார்க்ஸின் கருத்துகள் தவறானவை என்பதை அய்ஜாஸ் அகமது ஒப்புக்கொண்டார். ‘மார்க்ஸின் காலத்தில் அந்தப் பொருண்மைகள் குறித்த விரிவான ஆய்வுகள் வெளிவந்திருக்கவில்லை. மார்க்ஸின் தவறான அனுமானங்களுக்கு அதுவும் ஒரு காரணம்’ என்று அய்ஜாஸ் அஹமது சுட்டிக்காட்டினார்.
‘கார்ல் மார்க்ஸின் கருத்தில் வெளிப்பட்ட இந்தத் தவறு கோட்பாட்டு ரீதியான தவறுக்கும் இட்டுச் சென்றது. ‘ஒன்றைப்பற்றி யூகத்தின் அடிப்படையில் முடிவுசெய்யக்கூடாது, தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில்தான் முடிவுக்கு வரவேண்டும்’ என மார்க்ஸ் வலியுறுத்திய கோட்பாட்டுக்கு மாறானதாக இந்தியாவைப்பற்றிய அவரது கருத்து அமைந்துவிட்டது’ என்பது அய்ஜாஸ் அஹமதின் நிலைபாடாக இருந்தது.
வர்க்கத்துக்கும் சாதிக்கும் இடையிலான உறவை சரியாகப் புரிந்துகொண்ட மார்க்ஸியர்களில் அய்ஜாஸ் அஹமதுவும் ஒருவர். “ இந்தியாவைப் பற்றிய கார்ல் மார்க்ஸின் எழுத்துக்களில் மூன்று நம்பிக்கைகளை அவர் வெளிப்படுத்தியிருந்தார்: இங்கிலாந்தில் சோஷலிசப் புரட்சி நடைபெறும்; இந்தியாவில் தேசிய புரட்சி வெற்றிபெறும்; இந்தியாவின் சாதி அமைப்பு தகர்க்கப்படும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் அனுமானித்தது போல இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. ஆனால் மற்ற இரண்டும் இன்னும் நடைபெறவில்லை” என்ற அய்ஜாஸ் அஹமது “இப்போதும் இந்தியாவில் வர்க்கப் பிரச்சினை தீர்க்கப் படுவது என்பது சாதிப் பிரச்சனை தீர்க்கப் படுவதன் ஊடாகத்தான் நடைபெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அய்ஜாஸ் அஹமது போன்ற சிந்தனையாளர்கள் ஏன் தமிழ்நாட்டில் உருவாகவில்லை? இங்குள்ள இடதுசாரி இயக்கத்தினர் மட்டுமல்ல, எல்லோருமே விடை காண வேண்டிய கேள்வி இது.
-ரவிக்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர்)

பின்னூட்டமொன்றை இடுக