பகுப்பு: அரசியல்

  • சட்டமன்றத் தேர்தலில் எஸ்.யு.சி.ஐ பங்கேற்பு!

    சட்டமன்றத் தேர்தலில் எஸ்.யு.சி.ஐ பங்கேற்பு!

    எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) கட்சியின் தமிழ்நாட்டுச் செயலாளர் ஆ ரெங்கசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,”17வது சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்றமுறை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக அரசாங்கம் மறுபடியும் ஆட்சியில் தொடர முயற்சிக்கிறது. அதேசமயம், ஏகபோக கார்போரேட் ஆதரவு மதவெறி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள ஊழலுக்குப் பெயர்போன அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர யத்தனிக்கிறது.

    மக்களுக்கு இவர்கள் மேலுள்ள வெறுப்பை அறுவடை செய்ய தமிழினவாதம் பேசும் நா.த.க வும் திரை பிம்பத்தை முதலீடாகக் கொண்டு இளம் வாக்காளர்களின் ஒரு பிரிவினரை மாயைக்குள் மூழ்கடித்துவரும் த.வெ.க வும் களத்தில் இறங்கியுள்ளன.

    இவை அனைத்தும், அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் காரணமான பொருளாதார தனியார்மய கொள்கையை கைவிடுவோம் என்றோ, அத்தியாவசியப் பண்டங்களை அரசே முழு கட்டுப்பாட்டில் எடுத்து குறைந்த விலையில் விநியோகிப்போம் என்றோ வாக்குறுதி அளிக்கவில்லை. கவர்ச்சிகரமான இலவசங்களையே மீண்டும் வாக்குறுதியாக அறிவித்துள்ளன.

    இச்சூழலில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடிவரும் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) கட்சி ஐந்து மாநிலங்களிலும் போட்டியிடுகின்றது. தமிழகத்தில், சென்னையில் ஆர்கே நகர் (வேட்பாளர் திரு அ மோகன்ராஜ்), பெரம்பூர் (திரு ஜோ செபஸ்டின்), தென் மாவட்டங்களில் பெரியகுளம் (திரு ஜெ ரஞ்சித்குமார்), மதுரை(வடக்கு) (திரு ம ஜெ வால்டேர்) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி. (திரு சா லெனின்துரை), மேற்கு வங்கத்தில் 230, கேரளாவில் 32, அஸ்ஸாமில் 42, ஆகிய இடங்களிலும் போட்டியிடுகின்றது.

    ஒன்றிய பாஜக அரசாங்கம் கொண்டுவந்துள்ள, கல்வியை முற்றிலும் வியாபாரமாக்கி காவிமயமாக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையையும் (NEP2020) மின்சாரத்தை தனியர்மயமாக்கும் மின்சாரச் சட்டம் 2025ஐயும், தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பையும் விவசாய விரோத வேளாண் சட்டங்களையும் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) கட்சி எதிர்த்துப் போராடி வருகிறது. அவற்றை வெவ்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தி வரும் மாநில அரசாங்கங்களையும் எதிர்த்துக் குரல் கொடுக்கிறது.

    ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களின் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்க தொடர்ந்து களமாடிக்கொண்டிருக்கும் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்”.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • அறிஞர் அய்ஜாஸ் அஹமது போல ஒருவர் ஏன் தமிழ்நாட்டில் உருவாகவில்லை? 

    அறிஞர் அய்ஜாஸ் அஹமது போல ஒருவர் ஏன் தமிழ்நாட்டில் உருவாகவில்லை? 

    புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அஹமது 2022 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி காலமானார். அவர் மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரது சிந்தனைகள் குறித்து தமிழ்ச் சூழலில் எந்தவொரு விவாதமும் எழவில்லை.

    கோட்பாட்டு ரீதியில் மார்க்சியத்தை விளக்கியதோடு, சமகாலப் பிரச்சனைகளையும் மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆராய்ந்து அவர் பல கட்டுரைகளையும் நூல்களையும்  எழுதிவந்தார்.  குறிப்பாக எட்வர்ட் செய்தின் புகழ்பெற்ற ‘ஓரியண்டலிசம்’ நூல் குறித்து அவர் எழுதிய விமர்சனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் பொருத்தப்பட்டை விளக்கி அவர் எழுதிய கட்டுரை முதலானவை கவனத்துக்குரியவை .

    “ பாபர் மசூதி இடிப்புதான் இந்தியாவைப் பற்றி எழுதுவதில் எனக்கு இருந்த மனத்தடையைக் கைவிடும்படி என்னை கட்டாயப்படுத்தியது” என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்ட அவர் “கிராம்ஸ்சியின் சிந்தனைகள் இந்தியாவின் மதவாதச் சூழலை விளக்குவதற்குப் பொருத்தமானவை” என்றார். கடந்த 20 ஆண்டுகளில் மதவாதம் குறித்து அவர் விரிவான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

    “பாபர் மசூதி இடிக்கப்பட்ட படங்களைப் பார்த்தால், மசூதியின் மாடங்களில் ஏறி அவற்றைத் தகர்த்தவர்கள் யார் ?, அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்?’ அவர்கள் உயர் வகுப்புகளையோ அல்லது உயர் சாதிகளையோ சார்ந்தவர்கள் அல்ல;  அவர்கள் முதலாளித்துவம் மற்றும் சாதிய சமூகத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்.  இந்த வகையான வன்முறை அவர்களுக்கு அதிகார உணர்வைத் தருகிறது—அவர்களின் சொந்த சக்தியின்மையை ஒரு மாயையாக வெல்லும் உணர்வு அது” என்ற அவர், உலகெங்கும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் உதிரிப் பாட்டாளி வர்க்கம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.

    நரேந்திர மோடியின் வருகைக்குப் பின்னர் இந்திய அரசியல், அமெரிக்க அரசியலைப்போல ஆகிவிட்டது என்ற அவரது அவதானிப்பு கூர்ந்து நோக்கத்தக்கது. “ இந்திய அரசியல் வியக்கத்தக்க அளவில் அமெரிக்கமயமாக்கப்பட்டுள்ளது.  மகத்தான தலைவரை மீட்பராகக் கருதி வழிபடுதல் ஒருபுறம், மறுபுறம் பயம் மற்றும் வெறியை திட்டமிட்ட முறையில்  உற்பத்தி செய்வது வழக்கமாகிவிட்டது. அரசியல் இப்போது 24×7 தொலைக்காட்சி சேனல்கள், கருத்துக் கணிப்புகள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் நிதியுதவியுடன் நடத்தப்படும் மகத்தான பிரச்சார களியாட்டங்களால் இயக்கப்படுகிறது, அவற்றில் பெரும்பாலானவை இரகசியமானவை, கண்டுபிடிக்க முடியாதவை” என்று அவர் உலகெங்கும் தலைதூக்கியுள்ள வலதுசாரி அரசியல் போக்கை சுட்டிக்காட்டினார்.

    ‘இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ்  எழுதிய கட்டுரைகளில் ஓரியண்டலிச அணுகுமுறை இருந்தது’ என்ற எட்வர்ட் செய்தின் குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக அய்ஜாஸ் அஹமது மறுத்தார்.  அதே நேரத்தில் இந்தியாவைப் பற்றிய மார்க்சின் முடிவுகளில் இருந்த தவறுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவைப் பற்றிய கார்ல் மார்க்ஸின் எழுத்துக்களில் இரண்டு பிழைகள்  இருந்தன என்று குறிப்பிட்ட அவர்  ‘ இந்திய கிராமங்கள் தன்னிறைவு பெற்றவையாக இருந்தன,  கிராம சமூகங்கள் எவ்வித மாற்றமும் இல்லாது தேக்கம் அடைந்திருந்த விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தன,  நிலத்தின் மீது அங்கு எவருக்கும் தனியுடைமை இல்லை’ – முதலான கார்ல் மார்க்ஸின் கருத்துகள் தவறானவை என்பதை அய்ஜாஸ் அகமது ஒப்புக்கொண்டார். ‘மார்க்ஸின் காலத்தில் அந்தப் பொருண்மைகள் குறித்த விரிவான ஆய்வுகள் வெளிவந்திருக்கவில்லை. மார்க்ஸின் தவறான அனுமானங்களுக்கு அதுவும் ஒரு காரணம்’ என்று அய்ஜாஸ் அஹமது சுட்டிக்காட்டினார்.

    ‘கார்ல் மார்க்ஸின் கருத்தில் வெளிப்பட்ட இந்தத் தவறு கோட்பாட்டு ரீதியான தவறுக்கும் இட்டுச் சென்றது. ‘ஒன்றைப்பற்றி யூகத்தின் அடிப்படையில் முடிவுசெய்யக்கூடாது, தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில்தான் முடிவுக்கு வரவேண்டும்’ என மார்க்ஸ் வலியுறுத்திய கோட்பாட்டுக்கு மாறானதாக இந்தியாவைப்பற்றிய அவரது கருத்து அமைந்துவிட்டது’ என்பது அய்ஜாஸ் அஹமதின் நிலைபாடாக இருந்தது.

    வர்க்கத்துக்கும் சாதிக்கும் இடையிலான உறவை சரியாகப் புரிந்துகொண்ட மார்க்ஸியர்களில் அய்ஜாஸ் அஹமதுவும் ஒருவர். “ இந்தியாவைப் பற்றிய கார்ல் மார்க்ஸின் எழுத்துக்களில் மூன்று நம்பிக்கைகளை அவர் வெளிப்படுத்தியிருந்தார்:  இங்கிலாந்தில் சோஷலிசப் புரட்சி நடைபெறும்; இந்தியாவில் தேசிய புரட்சி வெற்றிபெறும்;  இந்தியாவின் சாதி அமைப்பு தகர்க்கப்படும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் அனுமானித்தது போல இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. ஆனால் மற்ற இரண்டும் இன்னும் நடைபெறவில்லை”  என்ற அய்ஜாஸ் அஹமது “இப்போதும் இந்தியாவில் வர்க்கப் பிரச்சினை தீர்க்கப் படுவது என்பது சாதிப் பிரச்சனை தீர்க்கப் படுவதன் ஊடாகத்தான்  நடைபெறும்”  என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    அய்ஜாஸ் அஹமது போன்ற சிந்தனையாளர்கள் ஏன் தமிழ்நாட்டில் உருவாகவில்லை? இங்குள்ள இடதுசாரி இயக்கத்தினர் மட்டுமல்ல, எல்லோருமே விடை காண வேண்டிய கேள்வி இது.

    -ரவிக்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர்)

  • குமரி திருவள்ளுவர் சிலை : ஆர்.எசு.எசு. கட்டுப்பாட்டிலா?

    குமரி திருவள்ளுவர் சிலை : ஆர்.எசு.எசு. கட்டுப்பாட்டிலா?

    தமிழ்நாட்டின் தலைநகரில் திருவள்ளுவர் கோட்டமும், தென்குமரி முனையில் வானுயர்ந்த திருவள்ளுவர் படிமமும் அமைந்து பெருமை சேர்க்கின்றன. இப்பணிக்காக வரலாற்றில் கலைஞர் கருணாநிதி இடம் பெறுவார் என்பது திண்ணம்.

    தென்குமரியைத் தன்வயமாக்கத் திட்டமிட்ட ஆர்.எசு.எசு. தம் மூத்த தொண்டர் ஏக்நாத் இரானடேவை அப்பணிக்காக அனுப்பியது. விவேகானந்தர் குமரி முனைப் பாறையில் தவம் இருந்த பின்னரே சிகாகோ மாநாட்டிற்குச் சென்றார் என்ற கட்டுக் கதையோடு தமிழகம் வந்த ஏக்நாத் இரானடே அந்தப் பாறையில் விவேகானந்தருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று அரசுகளை வலியுறுத்தி இசைவு பெற்றார். பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான அந்தப் பாறையை விட்டுத் தர கோயில் நிருவாகம் தொடக்கத்தில் மறுத்தது. ஆயினும் ஆர்.எசு.எசின் அரசியல் வலிமை அத்தடையைத் தூளாக்கியது. சிலை அமைக்க இசைவு பெற்ற ஏக்நாத் இரானடே சிலையைப் பாதுகாக்க மண்டபம் அமைக்கவும் முடிவு செய்து அப்பணியை முடித்தார். ‘விவேகானந்தா கேந்திரம்’ என்ற நடுவம் குமரியில் இருந்து சனாதன தருமத்தைக் காக்கச் செயல்படத் தொடங்கியது.

    விவேகானந்தர் பாறைக்கு அருகே இருந்த இன்னொரு பாறையில் திருவள்ளுவர் சிலையை அமைத்து அதையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ‘கேந்திரத்தின்’ தலைமையான ஏக்நாத் இரானடே விரும்பினார். அவரின் விருப்பத்தின்படி 1979ஆம் ஆண்டு தமிழ்நாட்டு முதலமைச்சர் ம.கோ.இரா. தலைமையில் இந்தியத் தலைமை அமைச்சர் மொரார்சி தேசாய் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

    1996இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கலைஞர் அவர்கள் திருவள்ளுவர் படிமத்தின் உயரத்தை 133 அடி என உயர்த்தி தமிழர் கட்டடக் கலையின் சிறப்பை உலகறியச் செய்தார். கி.பி. 2000ஆம் ஆண்டு சனவரி முதல்நாள் திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

    அதுவரை குமரிமுனைக் கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்குச் சென்ற படகுகள் அன்று முதல் திருவள்ளுவர் பாறைக்கும் சென்று வந்தன. இப்படகுச் சேவையை தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. திருவள்ளுவர் சிலை தமிழக அரசின் சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    விவேகானந்தா கேந்திரத்தின் எண்ணப்படி திருவள்ளுவர் பாறையும் அவர்கள் கட்டுப்பாட்டில் வரவேண்டும். ஆனால் தமிழ்நாட்டு அரசு திருவள்ளுவரைத் தம் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. உள்ளரசியல் செயல்பாடுகளின் வழியாக திருவள்ளுவர் பாறைக்குச் செல்லும் படகுப் பயணங்கள் தடுக்கப்பட்டன. அலை ஏற்றத் தாழ்வுகள் காரணமாக திருவள்ளுவர் பாறைக்குத் ‘தற்காலிகமாகப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்ற பலகை நிரந்தரமானது. கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் திருவள்ளுவர் சிலைக்குப் படகு விட வேண்டும் என்று கோரின. ஆயினும் அக்கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது.

    மக்களாகவே விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் இணைத்துப் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்ப வேண்டும் என்று ஆள்வோர் பொறுமை காத்தனர். இந்திய ஒன்றிய பா.ச.க. அமைச்சர்கள் பாலம் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என்று அவ்வப் போது அறிவிப்புகளை வெளியிடுவார்கள். ஆனால் இவர்களின் சூழ்ச்சியை நன்கறிந்த திருவள்ளுர் அறக்கட்டளையின் எதிர் அறிக்கைகளே அம்முயற்சியை முறியடித்தன. ஏனெனில் குமரியில் விவேகானந்தா கேந்திரத்தின் வழியாக ஆர்.எசு.எசு. வளர்வதை குமரித் தமிழர்கள் எவரும் விரும்பவில்லை. எனவே சிறு எதிர்ப்புக்கும் ஒன்றிய அரசின் முயற்சிகள் முடங்கிப் போயின.

    தம் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க் கட்சியாகிய தி.மு.க. வழியாகவே நிறைவேற்ற முடியும் என்ற நுட்பத்தை அறிந்து கொண்ட ஒன்றிய அரசு, இன்றைய தி.மு.க. அரசின் அறிவிப்பாகக் கண்ணாடிப் பாலம் திட்டத்தை முன் வைத்தது. தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணாடிப் பாலம் அமைத்தே தீருவோம் என்று முழங்கி அதை செயல்படுத்த முனைந்தார். தி.மு.க.வின் பா.ச.க. எதிர்ப்பு உண்மை என்று நம்பிய திருவள்ளுவர் அறக்கட்டளையினர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மனோ தங்கராசு ஆகியோர்களை அணுகி, கண்ணாடிப் பாலம் அமைத்தால் விவேகானந்தர் பாறை வழியாகவே திருவள்ளுவரைக் காண முடியும் என்றும் விவேகானந்தர் பாறையைக் காண தனிக் கட்டணத்தை கேந்திரம் பெற்று வருகின்ற சூழலில் அக்கட்டணத்தைச் செலுத்திய பின்னரே திருவள்ளுவரைக் காண நேரிடும் என்று விளக்கப்படுத்தினர். அப்படியெல்லாம் நேராது என்று அமைச்சர் பெருமக்கள் உறுதி அளித்தனர்.

    அவர்கள் அளித்த உறுதிமொழிக்கு மாறாக, கண்ணாடிப் பாலத்தின் வழியாக மட்டுமே திருவள்ளுவரைக் காண முடியும் என்ற சூழலில் இன்றைக்கு விவேகானந்தா கேந்திரத்தினர் உருவா முப்பதை திருக்குறள் அன்பர்களிடமும், தமிழ்ப் பெருங்குடி மக்களிடமும் பெற்றுக் கொண்டு திருவள்ளுவரைக் காண விடுகின்றனர்.

    நம் திருவள்ளுவர் இன்றைக்கு ஆர்.எசு.எசு. இயக்கத்திற்குப் பணம் பெற்றுத்தரும் கருவியாகப் பயன்படுகிறார். ஒன்றிய அரசின் சனாதனத்தை வேரோடு வீழ்த்தப் புறப்பட்ட திராவிடப் புலிகள் கேந்திரத்தின் அடாவடிக்குத் துணை போகின்ற திருப்பணியைச் செவ்வையாக ஆற்றிக் கொண்டிருக்கின்றனர்.

    நாம் தமிழக அரசிடம் பாலம் அமைக்க வேண்டாம் என்றோம். வருமுன்னர் காவாமல் கேட்டினை விளைவித்து விட்டார்கள். இப்போதும் குடிமூழ்கி விடவில்லை. விவேகானந்தர் பாறை நிருவாகத்தை ‘கேந்திரத்’திடமிருந்து மீட்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இரண்டு பாறைகளையும் நிருவாகம் செய்தால் தமிழக அரசுக்கு மனமுவந்து முப்பது உருவாவை அளிக்கத் தமிழ் மக்கள் அணியமாக உள்ளார்கள்.

    எனவே தமிழக அரசு கேந்திரத்திடமிருந்து விவேகானந்தர் பாறையை தம் வயப் படுத்த வேண்டும் என்று கோருகிறோம். அதுவே சனாதன தருமத்திற்கெதிரான உண்மையான முயற்சியாகும்.

    -தமிழ்.முகிலன்(தலைவர்,தமிழர் கழகம்)

  • அண்ணாமலையை ராஜ்தாக்கரே எதிர்ப்பது வரவேற்பிற்குரியதே!

    அண்ணாமலையை ராஜ்தாக்கரே எதிர்ப்பது வரவேற்பிற்குரியதே!

    ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என நாம் சொல்லும்போது ‘மராத்தியம் மராத்தியர்களுக்கே’ என்பது தவறாகுமா?

    ‘..மும்பை-மராத்தியத்தின் உள்ளாட்சி தேர்தலில்,  மராத்தியர் அல்லாத வடநாட்டு மாநிலத்தவரை மேயராக நியமனம் செய்வோம்..’  என பாஜக மராத்திய துணைத்தலைவர்  சொன்னதை ஆதரித்து, அண்ணாமலை பேசினார். இதை கண்டிக்கும் விதமாக சிவசேனையின் ராஜ்தாக்கரே பெருந்திளாக மராத்திய மக்களைத் திரட்டி கண்டனக்கூட்டம் நடத்தி, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுத்து, அண்ணாமலையை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமென சொல்வது சீமானின் துரோகத்தனத்தை  அம்பலப்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரை மேயர்களாக  நியமிக்க நாம் எப்படி அனுமதிக்க மாட்டோமோ,  அதைப்போலவே மராத்தியர்களும் வடநாட்டார்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இதை செய்யுங்கள் என பாஜக தலைவர் சொல்கிறார், அண்ணாமலை அதை ஆதரிக்கிறார், சீமான் அண்ணாமலைக்கு துணையாக மராத்தியர்களை எதிர்க்கிறார்.

    கடந்த அதிமுக-பாஜக ஆட்சிக்  காலத்தில்  கோவை நகரத்திற்கு மார்வாடி பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்த அதிமுகவிற்கு பாஜக நெருக்கடி கொடுத்தது. கடுமையான எதிர்ப்பு வந்தபின்னர் வாபஸ் பெற்றார்கள். கோவையின் ரங்கே கவுடர் வீதியை மார்வாடி ஜெயின் பெயர் ஒருவரின் பெயரில் மாற்ற வேண்டுமென குஜராத்தி-ராஜஸ்தானி சங்கம் கோரிக்கையை முன்னெடுத்தது.

    தமிழ்நாட்டின் நகரங்களில், தமிழனை சுரண்டும்,  வட மாநிலத்தவர்களை மேயராக நியமனம் செய்யவதை  தமிழ்தேசியர்கள் அங்கீகரிக்க இயலாது.

    ஆனால் அண்ணாமலைக்கு ஆதரவளிப்பதன் வாயிலாக, வடநாட்டான்களை தமிழர்களுக்கு தலைவராக்க சீமானுக்கு வெட்கமிருக்காது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது, சீமானின் அண்ணாமலை ஆதரவு.

    மும்பை வாழ் தமிழருக்கு ஆபத்தை உருவாக்கும், ‘சங்கி’ அண்ணாமலையின் வாய்கொழுப்பினை கண்டிக்காமல், அண்ணாமலையை தமிழனாக ஆதரியுங்கள் என சீமான் வக்காலத்து வாங்குவதென்பது, பாஜக-சங்கியிடம் பிச்சையெடுத்து நாம் தமிழர் கட்சி பிழைப்பு நடத்துவதை அம்பலப்படுத்தியுள்ளது.

    சீமான்-அண்ணாமலை கூட்டு என்பது தமிழினத்திற்கு ஆபத்தானது. இந்த இரு நபர்களின் சாதியை வைத்து, இவர்களே ‘அக்மார்க்’ தமிழர்கள் என கூப்பாடு போடும் போலி-தமிழ்த்தேசியர்களை தமிழர்கள் கண்டுணரவேண்டும். துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் இன அடையாளம் என்பது தமது பிழைப்பை நடத்திக்கொள்ளுவதற்கான அடையாளம் மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    சீமான் அண்ணாமலைக்காக ஒப்பாறி வைப்பதென்பது, நாளை தமிழினத்தை விலை பேசுவதற்காகவே!

    -திருமுருகன் காந்தி (ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்)