பகுப்பு: சர்வதேசம்

  • நேபாளத்தில் பாசிசமயமாகும் ஜென் ஜி இயக்க ஆட்சி!

    நேபாளத்தில் பாசிசமயமாகும் ஜென் ஜி இயக்க ஆட்சி!

    நேபாளத்தில் மைய நீரோட்ட கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு மாவோயிஸ்ட் கட்சி மற்றும் ஏனைய மைய நீரோட்டக் கட்சிகளுடைய ஆட்சிகளின் மீதான அதிருப்தியால் விளைந்த ஜென் ஜி(Gen z) எழுச்சியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த தனது வர்க்க புத்தியை காட்டும் விதமாக

    கல்வி நிறுவன கட்சிசார் மாணவர் பேரவைகளை மட்டுமன்றி அரசு அலுவலர் இடையேயான கட்சிசார் தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதையும் தடை செய்வதாக ஜென் ஜி இயக்க ஆட்சி அறிவித்துள்ளது.

    நேபாளத்தில் ஜனநாயகம் தோன்றுவதற்கோ நிலவும் ஜனநாயகத்தையாவது காப்பாற்றுவதற்கு பெரிதும் பங்காற்றாத ஜென் ஜி இயக்கம் தான் அண்மையில் அங்கு ஆட்சிக்கு வந்துள்ளது.

    ‘அரசியல் அகற்றப்பட்ட அரசியலை'(depoliticised politics) அரசியல் கொள்கையாக உடைய ஜென் ஜி-யின் ஆட்சியில் இதுதான் நடக்கும்.

    இத்தகைய ஆட்சிகளுக்கு அரசியல்மயமான அரசியலை கண்டுதான் அச்சம் அதிகம். அதற்கு ஊழல் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலை திரையாக பயன்படுத்தும். ஊழலுக்கு காரணமான உலகமயமாக்கலை பற்றி குறைந்தபட்சமாகவேனும் பேசாது.

    நேபாளத்தின் இப்போதைய பிரதமர் பாலேந்திரா பிறப்பதற்கு முன்பேயே ஜனநாயகம் கோரிய வெற்றிகரமான மாணவர் போராட்டம் நடந்ததுதான் அதன் வரலாறு.

    அப்போராட்டம் போட்ட பிச்சையில்தான் இன்றைய பிரதமர் பிரதமராக முடிந்தது.

    நேபாள மாணவர்கள் ஜென் ஜி‌ கட்சியிடமிருந்து ஆட்சியை பறிப்பார்கள் என்பது உறுதி.

    -பாஸ்கர்(அரசியல் செயற்பாட்டாளர்)

  • அமெரிக்காவின் சதிக்கு துணை போகின்றனவா குர்து அமைப்புகள்?

    அமெரிக்காவின் சதிக்கு துணை போகின்றனவா குர்து அமைப்புகள்?

    ஈரானிய குர்திஸ்தானின் அரசியல் படைகளின் கூட்டணி(CPFIK) என்கிற ஒரு இராணுவ கூட்டமைப்பு உருவாகி இருக்கிறது. இது பல்வேறு குர்திஸ்தான் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாக உருவாக்கப்பட்டுள்ளது. குர்திஸ்தான் ஜனநாயக கட்சி-ஈரான்(KDPI),குர்திஸ்தான் சுதந்திரக் கட்சி(PAK) குர்திஸ்தான் சுதந்திர வாழ்வுக்கான கட்சி(PJAK), ஈரானிய குர்திஸ்தானின் போராட்ட அமைப்பு உள்ளிட்ட  ஆறு அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஈரானில் கிளர்ச்சியை தொடங்குவதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் நிதி மற்றும் ஆயுத உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

    துருக்கி, சிரியா, ஈரான், ஈராக் என நான்கு நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு தேசம் குர்திஸ்தான். குர்து மக்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள்(சன்னி).

    ஏன் குர்துகளுக்கு போராட வேண்டும் என்கிற ஒரு நிர்பந்தம் இங்கு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்தால், கிட்டத்தட்ட பல்வேறு ஆண்டுகளாக பல ஆண்டுகளாக ஈரான் ஒரு நவீன அரசு உருவான பிறகு அவர்களால் தங்களது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. பல்வேறு கட்ட போராட்டங்களிலும் அவர்கள் கொல்லப்படுகிறார்கள், அடக்கப்படுகிறார்கள். பல்வேறு உரிமைகளை இழந்து தான் வாழ்கிறார்கள். குர்து மொழியை பயன்படுத்தக் கூட ஈரான் அரசாங்கம் பல்வேறு மறைமுக தடைகளை விதித்துள்ளது. ஆனால் குர்துகள் தொடர்ந்து தங்கள் உரிமைகளுக்காக போராடுகின்றனர்.

    தற்போது சிரியாவில் குர்துகளுக்கு அரசியல் உரிமைகளை வழங்காமல் கைவிட்ட அமெரிக்கா, அதே போன்று தான் ஈரானிலும் நடந்து கொள்ளும். ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் நலனுக்காக மட்டுமே தேசிய விடுதலை அமைப்புகளை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டியதை சாதித்துவிட்டு மீண்டும் அந்த தேசிய இன அமைப்புகள் அல்லது போராட்ட அமைப்புகளை கைவிட்டுவிடுவார்கள்.

    தற்போது  அமெரிக்கா செய்யப் விரும்புவதும் இதைத்தான். ஏனென்றால் ஈரானில் சில குர்து   அரசியல் கட்சிகள் ஏற்கனவே ஆயுத அமைப்புகளை, குடிப்படைகளை வைத்துள்ளனர். அவர்களை பயன்படுத்தி குர்து மக்களை ஆயுதபானிகளாக்கி ஈரானுக்கு எதிராக போரிட வைத்து தற்போதுள்ள  ஈரானிய அரசாங்கத்தை ஒரு ஆயுத ரீதியான உள்மோதலுக்கு இட்டுச் செல்வது என்பதுதான் அமெரிக்காவின் திட்டமாக உள்ளது. இது நடைபெறும் பட்சத்தில் அமெரிக்காவின் எண்ணமானது ஈரானை ராணுவ ரீதியாக பலவீனப்படுத்தி அங்கு ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தங்கள் நலனுக்கு சார்பான  ஈரானிய ஆட்சியாளர்களை கொண்டு வருவது என்பது தான்.  இந்த திட்டத்திற்கு குர்து மக்கள் ஒருபோதும் துணை நிற்கக்கூடாது.

    தற்போது ஈரான் அரசாங்கம் ஒரு நெருக்கடியான சூழலில் உள்ளது. ஈரானிய அரசாங்கத்தின் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், ஈரானிய அரசாங்கம் என்பது ஒரு இஸ்லாமிய குடியரசு. இஸ்லாமிய தத்துவ கண்ணோட்டத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு அரசாங்கம். தனது இனத்துவ, தேசிய அடையாளங்களை காட்டிலும் தனது இஸ்லாமிய நெறிமுறைகளையே உயர்த்திப் பிடிக்கிறது. இஸ்லாமிய கோட்பாட்டின் கீழ் அது அரசை அமைத்துள்ளது.

    ஈரானிய அரசாங்கமும் இத்தகைய சவால்களை முறியடிப்பதற்கு குர்துகளுக்கு தன்னாட்சி உரிமைகளை வழங்கலாம் என்று தான் பல்வேறு அரசியல் கோட்பாட்டாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

    ஏனெனில் உலகளாவிய அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் முன்னணியில் இருக்கும் ஈரான் தனது சிறு தவறாலும், சில  நிர்வாக குழப்பங்களாலும் தனக்கு எதிரான ஆயுதப் படைகளை உருவாக்குவதற்காக தானே வழி வகுத்தது போல் ஆகிவிட்டது.

    எனவே உடனடியாக ஈரான் அரசாங்கம் குர்து அரசியல் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள குர்துகளின் பாரம்பரிய தாயகத்திற்கு தன்னாட்சி உரிமையை வழங்குவதற்கும், குர்து மொழிக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கும்  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    – ஜா.ஜோஸ் ஃப்ரீட்
    (செய்தி ஆசிரியர், வாகைநியூஸ்.காம்)

  • இருண்ட நிழலை வீசும் எப்ஸ்டீன் ஆவணங்கள்-எஸ்.டி.பி.ஐ குற்றச்சாட்டு!

    இருண்ட நிழலை வீசும் எப்ஸ்டீன் ஆவணங்கள்-எஸ்.டி.பி.ஐ குற்றச்சாட்டு!

    எப்ஸ்டீன் ஆவணங்கள் மோடியின் தலைமைத்துவத்தின் மீதும் இந்தியாவின் இராஜதந்திர நாணயத்தின் மீதும் இருண்ட நிழலை வீசுகின்றன! – SDPI கட்சி குற்றச்சாட்டு!

    அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து வெளிவந்த கவலைக்கிடமான தகவல்கள், மோடியின் தலைமைத்துவத்தின் மீதும் இந்தியாவின் இராஜதந்திர நாணயத்தின் மீதும் இருண்ட நிழலை வீசுகின்றன என எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அஷ்ரஃப் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    இந்த ஆவணங்களில் உள்ள ஆழமான குற்றச்சாட்டுகள், இந்தியாவின் உயர்ந்த அரசியல் பதவியின் நாணயம் மற்றும் நெறிமுறைத் தரங்களைப் பற்றி கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, பாலியல் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு சொந்தமான ஒரு மின்னஞ்சலில், 2017இல் இஸ்ரேல் சென்றபோது பிரதமர் மோடி தனது ஆலோசனையைத் தேடியதாகவும், அதன்படி செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சல், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மகிழ்விக்கும் வகையில் பிரதமரின் நடத்தையை ஒரு திட்டமிட்ட நாடகமாக சித்தரிக்கிறது. இதனால், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராஜதந்திர சந்திப்பு, இந்தியாவின் இறையாண்மை மரியாதைக்கு பதிலாக வெளிநாட்டு அரசியல் நலன்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு காட்சியாக மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

    இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவையாக இருந்தால், இது வெறும் அவமானத்திற்கு அப்பாற்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முடிவெடுப்பதில் ஒரு களங்கமான குற்றவாளியின் செல்வாக்கு இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது. இது தேசிய சுதந்திரத்தை பாதிக்கிறது, பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது. இத்தகைய நடத்தை, இந்தியாவின் நீண்டகால சுதந்திர இராஜதந்திர பாரம்பரியத்திலிருந்தும் நெறிமுறை அரசியல் நடைமுறையிலிருந்தும் பெரும் விலகலாக இருக்கும்.

    அதே அளவுக்கு அதிர்ச்சியளிப்பது மோடி அரசின் பதிலடி. குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகவும் உண்மை அடிப்படையிலும் விளக்காமல், அமெரிக்க அதிகாரப்பூர்வ வெளியீடுகளில் குறிப்பிடப்பட்ட குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளாமல், அவற்றை வெறுமனே நிராகரித்துள்ளது. இந்த தவிர்ப்பு அணுகுமுறை சந்தேகத்தை மேலும் ஆழப்படுத்துகிறது மற்றும் வேண்டுமென்றே பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பது பற்றிய கவலையை எழுப்புகிறது.

    ஆவணங்கள் மேலும், எப்ஸ்டீனுக்கும் மூத்த இந்திய அதிகாரிகளுக்கும் இடையே மீண்டும் மீண்டும் தொடர்புகள் இருந்ததை காட்டுகின்றன. இதில் மோடி அமைச்சரவையின் முக்கிய அமைச்சரான ஹர்தீப் சிங் பூரியுடன் அவர் தண்டனை பெற்ற பின்னரும் சந்திப்புகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இவை உறுதிப்படுத்தப்பட்டால், நெறிமுறைத் தரங்களையும் அரசியல் பொறுப்புணர்வையும் மிகுந்த அலட்சியப்படுத்தியதாக இருக்கும். மேலும், எப்ஸ்டீன் பிரதமர் மோடிக்கும் ஸ்டீவ் பானன் (தீவிர வலதுசாரி, பிரிவினைவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடையவர்) இடையே சந்திப்பு ஏற்பாடு செய்ய முயன்றதாகக் கூறப்படுவது, இந்தியத் தலைமையை நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக அடித்தளங்களை அச்சுறுத்தும் தீவிரவாத உலக வலையமைப்புகளுக்கு ஆளாக்கும் ஆபத்தான போக்கை காட்டுகிறது.

    இவை அனைத்தும் சேர்ந்து ஒரு தேசிய அவமானமாக உள்ளன. அரசு உள்நாட்டில் எதிர்ப்புகளை பொறுத்துக்கொள்ள மறுப்பதற்கும், வெளிநாட்டில் சந்தேகத்திற்குரிய தொடர்புகளை பொறுத்துக்கொள்வதற்கும் இடையே ஒரு கவலை தரும் முரண்பாட்டை இவை வெளிப்படுத்துகின்றன. இதேவேளை, சிறுபான்மையினர், பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் அதிகரித்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

    இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான, பக்கபலமற்ற விசாரணை நடத்த வேண்டும். நாடாளுமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பிரதமர் மிக உயர்ந்த பொறுப்புக்கூறல் தரங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    -முஹம்மது அஷ்ரஃப்
    தேசிய பொதுச் செயலாளர், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI).

  • எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன?

    எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன?

    “எப்ஸ்டீன் கோப்புகள்” (Epstein Files) என்றால் என்ன என்று பலர் என்னிடம் உள்பெட்டியிலும் வாட்சப்பிலும் கேட்டவண்ணம் இருக்கிறார்கள், அவர்களுக்காக இந்த சுருக்கமான பதிவு..

    அமெரிக்க நிதி முதலீட்டாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் விசாரணை ஆவணங்களின் தொகுப்பு சமீபத்தில் வெளிவானது. இதில் நீதிமன்ற ஆவணங்கள், சாட்சியங்கள், விமானப் பயணப் பதிவுகள், மின்னஞ்சல்கள் மற்றும் பல வழக்கு ஆவணங்கள் அடங்கும். இவை ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட ஒரு அரசு அறிக்கையாக அல்லாது, பல ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் விசாரணைகள் மூலமாக பொதுமக்களுக்காக ஒரு வெளிப்படை தன்மைக்காக வெளியிடப்பட்டன.

    இந்த ஆவணங்கள், சிறுமிகளை பாலியல் சுரண்டலில் ஈடுபடுத்திய குற்றச்செயல்களை மேற்கொண்டபோதும், எப்ஸ்டீன் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உயர்வட்டங்களில் எவ்வாறு செல்வாக்கை பெற்றிருந்தார் என்பதை வெளிப்படுத்துகின்றன. அவரது செல்வம், தனியார் விமானப் பயணம், மற்றும் நன்கொடைகள் மூலம் சமூகத்தில் எத்தகைய மரியாதையை நம்பிக்கையை உருவாக்கியது என்பதை இந்த விசாரணைகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், ஆவணங்களில் ஒருவரின் பெயர் இடம்பெற்றிருப்பது குற்றத்தில் ஈடுபட்டதாக கருத முடியாது என அதிகாரிகள் சமீபமாக மழுப்பி வருகின்றனர்.

    எப்ஸ்டீனின் வரலாறு 2008ஆம் ஆண்டில் பொதுமக்கள் கவனத்திற்கு வந்தது. அப்போது புளோரிடாவில் செய்யப்பட்ட ரகசியமான ஒப்பந்தத்தின் மூலம் அவர் குறைந்த சிறைத் தண்டனையை மட்டுமே அனுபவித்தார். இந்த ஒப்பந்தம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தகவல்கள் வழங்கப்படாததால், பின்னர் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. 2019ஆம் ஆண்டு நியூயார்க் மாநிலத்தில், சிறுமிகள் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

    ஆனால் நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு முன்பே, 2019 ஆகஸ்ட் 10 அன்று எப்ஸ்டீன் சிறை அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் அமெரிக்காவின் பெரும் அரசியல்வாதிகள் முதல் உலகெங்கிலும் உள்ள முக்கிய புள்ளிகள் ஈடுபட்டுள்ளதால், இந்த மரணம் எத்தகையது என்பதை  உஙக்ள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். அதிகாரப்பூர்வமாக இது தற்கொலை என அறிவிக்கப்பட்டாலும், சிறை கண்காணிப்பில் ஏற்பட்ட கடுமையான தவறுகள் பொதுமக்கள் சந்தேகத்தை அதிகரித்தன. அவரது மரணம் குற்றவியல் வழக்கை நிறுத்தினாலும், வெளிப்படைத்தன்மைக்கான கோரிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியது. சிவில் சமூகத்தில் இன்னும் இது தீவிர விவாதமாக மாறியது.

    அதன்பின்னர் விசாரணைகள் எப்ஸ்டீனின் நெருங்கிய கூட்டாளிகளின் மீது திரும்பின. குறிப்பாக, சிறுமிகளை வேலையில் அமர்த்தி கொண்டு வந்து,  பழக்கப்படுத்திய குற்றச்சாட்டில் கிஸ்லேன் மேக்ஸ்வெல் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த குடிமக்கள் வழக்குகள் மூலம் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டன. 2024 முதல் 2026 வரை, அமெரிக்க நீதித்துறை அமைச்சகத்தின் மூலம் கூடுதல் ஆவணங்கள் பொதுவெளிக்கு வந்தன — இருப்பினும் பல பகுதிகள் இன்னும் மறைக்கப்பட்டே உள்ளன.

    எப்ஸ்டீன் கோப்புகள் அமெரிக்காவைத் தாண்டி உலகளாவிய அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. சில அரசியல் தலைவர்கள் மற்றும் நிறுவனங்கள் கடந்த கால தொடர்புகள் குறித்து விசாரணைகளை எதிர்கொண்டன. உலகளாவிய சதி உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், செல்வம், அதிகாரம் மற்றும் நீதித்துறையின் பொறுப்புகள் குறித்த விவாதங்களை இந்த விவகாரம் தொடர்ந்து எழுப்பிய வண்ணம் உள்ளது.

    உலகளாவிய அரசியல் லாபிக்கள் எவ்வாறு செயல்பட்டு வருகிறது, பெரிய பெரிய ஒப்பந்தங்கள் நிகழும் அல்லது உறுதி செய்யும் இடங்களில் எல்லாம் எப்படி காமக்களியாட்டம் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது என்பதை இந்த விவகாரம் வெளிச்சம் போட்டு காட்டி ஒரு பெரும் உரையாடலையும் தற்காலிக உலக தலைவர்கள் யார் என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

    மற்றபடி எப்ஸ்டீன்  ஒரு சாதாரன ஆசிரியராக தனது வாழ்வை தொடங்கி எப்படி இத்தனை பெரும் செல்வாக்கு மிக்க மனிதர் ஆனார்?எப்ஸ்டீன்  யார் யாரை எல்லாம் தன்னுடைய தீவிற்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்? அங்கே சிறுமிகள் எல்லாம் நடனமாட உலக தலைவர்களில் பலர் எப்படி சிறுமிகளை தேர்வு செய்தார்கள்? அந்த சிறுமிகளை என்னவெல்லாம் செய்தார்கள்? யார் யார் எல்லாம் எப்ஸ்டீனின் நண்பர்கள் என்பதை நீங்கள் அனைவரும் கொஞ்சம் இணையத்தில் தேடுங்களேன்…

    இதுவரை வெளிவந்துள்ள எப்ஸ்டீன்  தொடர்பான ஆவணங்கள் எவ்வளவு என்பதை மட்டும் இங்கே சொல்லி விடைபெறுகிறேன்.

    35 லட்சம் ஆவணங்கள்
    2,000 காணொளிகள்
    180,000 புகைப்படங்கள்

    ஆனால் இவை எல்லாம் உண்மை என்றாலும் அந்த ஒரே ஒரு படம், நடனம் ஆடும் படம் மட்டும் பொய் எனும் வாட்சப் யூனிவர்சிட்டியின் தலைமையகம் உள்ள நாட்டில் இருந்து இதனை எழுதுவதில் பெருமையடைகிறேன்.

    -அ.முத்துக்கிருஷ்ணன்

    (எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் முகநூல் பதிவு. காண்க: https://www.facebook.com/share/1AXBBFfzqo/)

  • சிரியா: சுற்றுச்சூழலை பாதுகாக்க தனிப் படை!

    சிரியா: சுற்றுச்சூழலை பாதுகாக்க தனிப் படை!

    வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் ஜனநாயக தன்னாட்சி நிர்வாகம் (DAANES) சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு புதிய சிறப்புப் பிரிவை நிறுவியுள்ளது. பிராந்திய சுற்றுச்சூழல் முகமையுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன், உள் பாதுகாப்புப் படைகளால் (அசயிஷ்) இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புப் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இயற்கையை முறையாகப் பாதுகாப்பதும், சுற்றுச்சூழல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

    வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் சுற்றுச்சூழல் குழுவின் வருடாந்திரக் கூட்டத்தில் டிசம்பர் 15 அன்று எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இணங்க இந்த புதிய அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிமுகம் திங்கட்கிழமை ரக்கா மாகாணத்தில் உள்ள சுற்றுச்சூழல் முகமை கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதிய பிரிவின் பிரதிநிதிகள், பிராந்திய சுற்றுச்சூழல் சபைகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச்சூழல் முகமையின் இணைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    சுற்றுச்சூழல் முகமையின் இணைத் தலைவரான இப்ராஹிம் எல்-எசெட் தனது உரையில், தொடர்ச்சியான சுற்றுச்சூழல் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கடந்த சில ஆண்டுகள் சிரியா முழுவதிலும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவில் சுற்றுச்சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார். அந்தப் பகுதி பல சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்கிறது என்றும், அவற்றுக்குத் தீவிர நடவடிக்கை தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    புதிய பிரிவின் மூத்த பிரதிநிதியான ஜாசிம் அல்-தைஃப் விளக்கமளிக்கையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் படைகள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தடுப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன என்றார். இந்த அலகு, சுற்றுச்சூழல் முகமையால் நிறுவப்பட்ட தெளிவாக வரையறுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அளவுகோல்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த புதிய அமைப்பு எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் மாகாணங்களிலும் செயல்பட உள்ளது. சட்டவிரோத வேட்டையை எதிர்த்துப் போராடுவது, சட்டவிரோத மரம் வெட்டுவதைத் தடுப்பது, மற்றும் மண், காற்று, நீரைப் பாதுகாப்பது ஆகியவை இதன் பணிகளில் அடங்கும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள், காடுகள் மற்றும் ஆறுகளின் ஓரங்களில் சுற்றுச்சூழல் முகமையுடன் இணைந்து ரோந்து மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    அந்தப் பிரிவில் போதுமான பணியாளர்கள் இருப்பார்கள் என்றும், 2026 ஆம் ஆண்டு முதல் ஒரு மூலோபாய மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அது வலுப்படுத்தப்பட்டு விரிவாக்கப்படும் என்றும் அல்-தைஃப் சுட்டிக்காட்டினார். இயற்கை இடர்களுக்கான தயாரிப்புகளுக்கும் ஒரு சிறப்புக் கவனம் செலுத்தப்படும். எதிர்காலத்தில், வெள்ளம் அல்லது காட்டுத் தீ போன்ற அவசரநிலைகளுக்கு அந்தப் பிரிவால் இரவு பகல் பாராமல் பதிலளிக்க முடியும்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்புப் படைகளை நிறுவியதன் மூலம், சமூகப் பாதுகாப்பின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை நிலைநிறுத்த தன்னாட்சி நிர்வாகம் நோக்கம் கொண்டுள்ளது. உள்ளூர் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு, வடக்கு மற்றும் கிழக்கு சிரியா முழுவதும் நீண்ட காலத்திற்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் நிலையான சுற்றுச்சூழலை உறுதிசெய்ய உதவும்.

  • அமெரிக்காவினால் தாக்குதலுக்கு ஆளாகும் நாடுகளுக்கு சீனா உதவாதது ஏன்?

    அமெரிக்காவினால் தாக்குதலுக்கு ஆளாகும் நாடுகளுக்கு சீனா உதவாதது ஏன்?

    * அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆளான வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி சுமார் 75 விழுக்காடு சீனாவுக்கே செல்கிறது. அத்துடன் சீனா அங்கு எண்ணெய் துறையில் ஏராளமான முதலீட்டை மேற்கொண்டுள்ளது.

    * சீனா கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் மேற்கொண்டுவரும் BRI(Belt and Road Initiative) திட்டத்தில் வெனிசுவேலா அமைந்துள்ள இலத்தீன் அமெரிக்காவில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன.

    * சீனா முக்கியமாக செல்வாக்கைச் செலுத்தும்(அமெரிக்காவுக்கு போட்டியாக கட்டியுள்ள) ‘பிரிக்ஸ்’ அமைப்பில் வெனிசுவேலா இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது.

    * வெனிசுவேலா தனக்கும் சீனாவுக்கும் சாதகமான சீன நாணயத்திலேயே வர்த்தகத்தை மேற்கொள்கிறது.

    இந்நிலையில் வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் சீனாவுக்கும் எதிரானது என்றாலும் சீனாவானது அமெரிக்காவைப் போல் தனது கப்பற்படையை அனுப்பாமல் அமெரிக்காவிடம் வெனிசுவேலாவை/இலத்தீன் அமெரிக்காவை இழக்கிறது.

    ஆனால் முந்நாளைய சோவியத் ஒன்றியமானது போலி சோசலிச குருச்சேவ் மற்றும் பிரஷ்னேவ் காலத்திலும் கியூபா, பாலஸ்தீனம், தென்னாப்பிரிக்கா, வியட்னாம் போன்றவற்றிற்கு அமெரிக்காவுக்கு எதிராக பலவித உதவிகளை செய்து அந்நாடுகள் அப்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு போகாமல் பார்த்துக் கொண்டது.

    ஆனால் இன்றோ போலி சோசலிச சீனா அவ்வாறில்லை.

    கொரியாவை அமெரிக்காவின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு சீன இராணுவத்தை அனுப்பி வடகொரியா அமைவதற்கு காரணமான மாவோ காலத்திய சீனாவே வேறு.

    அமெரிக்காவுக்கு மதுரோ அதிரடியாக கடத்தப்பட்ட பின் டிரம்ப்பை கண்டு அஞ்சியே வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியும் அதன் அண்டை நாடு கொலம்பியாவின் ஜனாதிபதியும் டிரம்ப்பிடம் சமரசமாகியே போகின்றனர்.

    வெனிசுலேவின் எண்ணெய் வளத்தை உண்டு கொழுத்து நன்கு பலனடைந்த சோசலிச(?) சீனாவும் டிரம்ப்பிடம் இலத்தீன் அமெரிக்காவை விட்டுக் கொடுத்துவிட்டது. அமெரிக்காவை விடவே வலுவிருந்தும்.

    குருச்சேவ் காலம் முதல் முப்பதாண்டுகள் சோசலிசம் இல்லாமல் போனாலும் முந்நாளைய சோவியத் ஒன்றியம் கியூபாவுக்கு ஆதரவாக நின்றதுபோல் மாவோவுக்கு பிந்தைய சீனா இன்று தயாராக இல்லை.

    அதனால் வெனிசுவேலாவும் கொலம்பியாவும் டிரம்ப்பிடம் சமரசத்திற்கு செல்கின்றன.

    மதுரோ டிரம்ப்பால் கடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் சீன அதிகாரிகளுடன்தான் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

    மேலும் வெனிசுவேலாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீனாவின் இராணுவத் தளவாடங்களை டிரம்ப்பின் இராணுவத் தளவாடங்கள் செயலற்றதாக்கிய பின்தான் மதுரோ கடத்தப்பட்டார்.

    மதுரோவின் இன்றைய இந்நிலைக்கு சீனாவின் இத்தகைய செயலின்மைக்கும் பங்கிருக்கிறது.

    -பாஸ்கர் (ஆசிரியர் குழு உறுப்பினர், புதிய முன்னோடி)

  • வெனிசுவேலாவும் ஆட்சிக் கவிழ்ப்புகளும்!

    வெனிசுவேலாவும் ஆட்சிக் கவிழ்ப்புகளும்!

    வெனிசுவேலாவில் அமெரிக்காவானது 2002ல் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தியதால் அப்போதைய வெனிசுவேலா ஜனாதிபதி சாவேஸ் தனது ஆட்சியை இழந்தார்.

    சாவேஸின் நலவாழ்வு ஆட்சியினால் பலனடைந்த கீழ்மட்ட வெனிசுவேலாவின் இராணுவ வீரர்களும் வெகு மக்களும் வீதிகளில் இறங்கி இரண்டே நாட்களில் அதை முறியடித்தனர். சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார்.

    அவருடைய ஆட்சியில் துணை ஜனாதிபதியாக இருந்த மதுரோ இப்போது அமெரிக்காவினால் பிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுள்ளார்.

    மதுரோவின் ஆசான் சாவேஸுக்கு ஆதரவாக அப்போது களமிறங்கி வெற்றியை சாதித்த சாமானிய வெனிசுவேலா மக்கள் இப்போதும் இறங்கி மதுரோவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்களா?

    மதுரோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை குறைத்து மதிப்பிட்டதால் அவர் வீழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது.

    மதுரோ இராணுவக் கோட்டையில் (Ft.Tiuna Military Installation) படுக்கையறையில் தனது மனைவியுடன் உறங்கிக்கொண்டிருந்த போதே அமெரிக்க இராணுவம்  திடீரென்று நுழைந்து இருவரையும் அமெரிக்காவுக்கு கடத்தி சென்றுவிட்டது.

    சிஐஏவின் ஊடுருவல்தான் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. சிஐஏ தனது மாதக்கணக்கிலான உளவுச் செயற்பாட்டில் மதுரோ என்ன சாப்பிடுவார் என்பதையும் அவருடைய செல்லப் பிராணிகள் குறித்தும் தகவல்களை சேகரித்திருக்கிறது.

    ஆனால் பிடல் காஸ்ட்ரோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சரியாக மதிப்பிட்டதால் சிஐஏவின் முயற்சியை இருபது தடவைகளுக்கும் மேல் முறியடித்தார். அவர் பயன்படுத்தும் சிகரெட் பிராண்டை அறிந்துகொண்டு அவரை கொல்வதற்கு எத்தனித்ததையும் முறியடித்தார்.

    அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் இலத்தீன் அமெரிக்காவில் பல ஆட்சிக் கவிழ்ப்புகளை மேற்கொண்டதுடன் சிலே நாட்டின் ஜனாதிபதி அலெண்டே, பெரு நாட்டின் மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் கன்சோலா ஆகியோரை பிடித்தது.

    இதில் அலெண்டே பிடிபட்ட உடனே கொல்லப்பட்டார்; கன்சோலா முப்பதாண்டு கால சிறைவாசத்திற்கு பின் சிறைச்சாலையிலேயே இறந்தார்.

    மதுரோ இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமலேயே இருந்து ஆட்சியை இழந்து அமெரிக்காவால் அமெரிக்காவிலேயே சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

    அதே இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஆதரவிலான வலதுசாரிகள் நாடாளுமன்றத் தேர்தல்களின் மூலம் பல நாடுகளில் அண்மைக் காலமாக ஆட்சியை பிடித்து வருகிறார்கள்.

    சென்ற நவம்பரில் டிரம்ப் வெளியிட்ட ‘தேசிய பாதுகாப்பு மூலவுத்தி’-25(National Security Strategy-25) ஆவணம் இலத்தீன் அமெரிக்காவையே முதன்மையாக குறி வைக்கிறது.

    மதுரோ இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாததுடன் உடன் இருப்போரே உள்குத்து வேலையில் ஈடுபட்டு வந்ததன் விளைவே அவர் சந்திக்கும் இத்தகைய நிலை.

    -பாஸ்கர் (ஆசிரியர் குழு உறுப்பினர்,புதிய முன்னோடி)

  • வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல்! எஸ்.யூ.சி.ஐ கண்டனம்

    வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல்! எஸ்.யூ.சி.ஐ கண்டனம்

    வெனிசுலா மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு எதிராக ஜன. 6 முதல் ஒரு வாரம் எதிர்ப்பு வாரத்தைக் கடைப்பிடிக்க எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) அறைகூவல் விடுக்கிறது.

    எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) பொதுச் செயலாளர் திரு பிரவாஸ் கோஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
    “அனைத்து சர்வதேச சட்டங்கள், நடைமுறைகளை அப்பட்டமாகத் தகர்த்தெறிந்து, போர் வெறியர்களான அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வெனிசுலாவை குண்டுவீசி, போதைப்பொருள் கடத்தல் என்ற மோசடி குற்றச்சாட்டில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தியுள்ளனர். இச் செயல், ஈராக் மீது படையெடுத்து ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனை பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்ததாக பொய்யான சாக்குப்போக்கில் கொன்றதை எதிரொலிக்கிறது.
    உண்மையில், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வெனிசுலாவின் பரந்த எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்காக மதுரோவை அதிகாரத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றி, ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை நீண்ட காலமாக மறைமுகமாக ஒத்திகை பார்த்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தக் கொடூரமான செயலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
    உலகெங்கிலும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, அமைதியை விரும்பும் மக்கள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அமெரிக்க ஆட்சியின் இந்த மிகக் கொடூரமான செயலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான இந்திய அரசாங்கம், ஆளும் இந்திய ஏகபோகவாதிகளின் வர்க்க நலனுக்கு அடிபணிந்து, இந்திய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை முற்றிலும் புறக்கணித்து, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் இத்தகைய குற்றச் செயலைக் கண்டிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்கள். இது பெண்டகன் ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் என்பதை நாங்கள் திகைப்புடன் கவனிக்கிறோம். அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் விமானப்படை வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய செய்தி வெளியானதும், கடந்த ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநில தலைநகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதில் எங்கள் கட்சி சிறிதும் தாமதிக்கவில்லை. இப்போது ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு வார கால ஆர்ப்பாட்டத்தை எங்கள் கட்சி ஏற்பாடு செய்யும். அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் இத்தகைய கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, போரை எதிர்க்கும், அமைதியை விரும்பும் அனைத்து நாட்டு மக்களையும் முன்வந்து பங்கேற்குமாறு நாங்கள் அறைகூவி அழைக்கிறோம்.

    எஸ்.யூ.சி.ஐ கட்சி சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டம்

    இவ்வாறு எஸ்.யூ.சி.ஐ(கம்யூனிஸ்ட்) கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.